தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்றைய தினம் 2025-ம் ஆண்டிற்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் முயற்சிகள், கட்டமைப்புகள் அனைத்து பாராட்டுதலுக்குரியது. தமிழ்நாடு அரசின் கல்வித்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை போன்ற துறைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மிகப்பெரிய துறைகளாகும். இதில் மிகவும் அடிப்படையானது கல்வித்துறை தான். அந்த வகையில் நான் முதல்வன், மாபெரும் தமிழ் கனவு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, உயர்வுக்கு படி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயின்று தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் பாடங்களை ஆர்வமுடனும், முழு ஈடுபாட்டுடனும் புரிந்தும் பயில வேண்டும். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பாடங்கள், தகுதிகள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். நமது தேடுதலுக்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். உண்ண தயாராக உள்ள உணவு (Ready to eat) போன்று தான் இன்றைய பாடத்திட்டங்களும், செயல்முறைகளும் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. எனவே எந்த செயலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளார் வீ.சகுந்தலா அவர்கள் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும், பயனாளி அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் எம்.வினோத் கண்ணன் சுயதொழில் முனைவோர் குறித்தும், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி அவர்கள் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. TNPSC, TNUSRB, SSC, UPSC போன்ற பல்வேறு மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிபடுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும், சீராப்பள்ளி பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.73.20 இலட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை மற்றும் கழிப்பிடம் கட்டுமான பணிகளையும், வார்டு எண்.8 ஒடுவங்குறிச்சி சாலை பெரியசாமி வீடு முதல் சித்ரா மோகன் வீடு வரை அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.18.20 இலட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் கட்டும் பணியினையும், நாமகிரிபேட்டை பேரூராட்சியில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும், அரியாகவுண்டம்பட்டியில் பொது சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு, சேலம்) பெ.கவிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ப.சண்முகம், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் அ.யூசுப் கான் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story