நாகூர் ஆண்டவர் தர்காவில் கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்படவில்லை என வழக்கு

12 வாரங்களுக்குள் தணிக்கை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், நாகூர் ஆண்டவர் தர்காவின் பங்குதாரர்களில் ஒருவருமான நாகை மாவட்டம் நாகூர் ஏ.பி.தமீம் அன்சாரி, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஒரு மனுவை அனுப்பி, அதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்காததால், ஏ.பி.தமீம் அன்சாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி விசாரணை நடைபெற்றது. விசாரணையில், மனுதாரர் ஏ.பி. தமிம் அன்சாரியின் வழக்கறிஞர், நாகூர் தர்காவின் கணக்குகளை பரிசோதனை செய்து, தணிக்கை செய்யவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யவும் வக்பு வாரியத்திற்கு மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். ஏனெனில், தர்கா நிர்வாகத்திடம் இதுவரை வெளிப்படைத் தன்மை இல்லை. தெளிவான முறைகேடு மற்றும் நிதி மோசடி நடைபெறுகிறது. கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்படவில்லை. உதாரணமாக, ஒரு செலவு பதிவில், நாகூரிலிருந்து சென்னைக்கு செல்ல ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்றார். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வழக்கறிஞர், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். அதற்கு நீதிபதி தண்டபாணி, அதனால் வக்பு வாரியம் கணக்குகளை பரிசோதிப்பதை தடுக்காது என்றார். அதற்கு வக்பு வாரிய வழக்கறிஞர், சிறிது நேரம் மௌனத்திற்கு பிறகு, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு வக்பு வாரியம் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து, 12 வாரங்களுக்குள், நாகூர் ஆண்டவர் தர்காவின் கணக்குகளையும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிடுகிறது என, ரிட் மனுவை முடித்து வைத்தார்.
Next Story