நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா!

X
Namakkal King 24x7 |12 Oct 2025 8:44 PM IST'கம்பன் என்றொரு மானுடன்' என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநரும், பாரதியார் சங்க தலைவரும், பேராசிரியையுமான உலகநாயகி பழனி விழாவில் சிறப்புரையாற்றினார்.
நாமக்கல்லில், கம்பன் கழகம் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி விருதுகள் வழங்கும் விழா நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள சனு ஹோட்டலில் நடைபெற்றது.இதில், கம்பர் விருது, கம்பர் மாமணி விருது, துறை சார் வல்லுநர் விருது, மாணவர்களுக்கு பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில், கம்பன் கழக தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் அரசு பரமேசுவரன் வரவேற்றார். தமிழ் சங்க தலைவர் மருத்துவர் இரா.குழந்தைவேல், கம்பன் கழக பொருளாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார், கே.கே.பி.நல்லதம்பி, நல்லுசாமி , இராம.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு 'இயற்றமிழ் பேரறிஞர்' விருதும், ராசிபுரம் சிந்தாமணிச் செல்வர் புலவர் மு.ராமசாமிக்கு நூற்றாண்டு விழா விருதும்(அவரது மகன் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார்), 'இலக்கியச் சுடர்' சென்னை இரா.ராமமூர்த்திக்கு கம்பர் விருதும், திருச்செங்கோடு கம்பன் கழக துணைத் தலைவரும், செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளருமான பேராசிரியர் ஆ.பாலதண்டபாணிக்கு கம்பன் மாமணி விருதும் வழங்கப்பட்டது.'கம்பன் என்றொரு மானுடன்' என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநரும், பாரதியார் சங்க தலைவரும், பேராசிரியையுமான உலகநாயகி பழனி விழாவில் உரையாற்றியதாவது; சென்னையில் 'உறவுச் சுரங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி வாரந்தோறும் இலக்கிய சொற்பொழிவுகளை நடத்தி வருகிறேன். எனது தமிழ் பணியை பாராட்டி வாழ்த்திய சிலம்பொலியார் பிறந்த மண்ணில் கம்பன் பற்றி பேசுவதில் பெருமையாக உள்ளது. தற்போதைய காலச்சூழலில் சுருங்கிய 400 ஆண்டு கால வயதுடைய ஆங்கிலம் அழிந்துபோகும். 4,000 ஆண்டு கால தமிழ் அழிந்து போகாது. 'கம்பன் என்றொரு மானுடன்' என்ற தலைப்பை வழங்கிய பெருமை பாரதியையே சாரும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு போல, கம்பன் பிறந்த தமிழ்நாடு என பாரதியார் கம்பனை பெருமைப்படுத்தி உள்ளார். ஐந்து வகை மனிதர்கள் உண்டு என்று கூறிய அவர் பித்த மனிதர், விந்தை மனிதர், இறந்த மனிதர், வேடிக்கை மனிதர், கலகபூச்சி மனிதர் என்றார். இதில், ஒவ்வோர் மனிதருக்கும் ஒரு குணம் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்றையொன்று அடித்துக் கொல்லாது. ஆனால் மனிதன் தான் உயர மற்றொரு மனிதரை அடித்துக் கொல்வான். நல்ல மனிதன் என்பவனை, கம்பராமாயணத்தில் கண்டறிந்தான். அதாவது, சுயநலமின்றி, பிறர் நலம் பேணுபவனே வாழத் தகுதியுடைய மனிதன் எவனோ அவனே நல் மனிதன். கம்பராமாயணம் எழுதிய கம்பனுக்கு புகழ் சேர்த்த பெருமை பாரதிக்கு உண்டு என்றார். முன்னதாக, 'துறைசார் வல்லுநர்' விருது வழங்கும் நிகழ்வில், கம்பன் கழக பொருளாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார் விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன தலைவர் க.சண்முகம்,எருமப்பட்டி அரசுப் பள்ளி முதுநிலை தமிழாசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற செ.செந்தில்குமார், மோகனூர் மருத்துவர் எஸ்.மணிவண்ணன், சிங்களாந்தபுரம் பி.மகுடீஸ்வரன், சு.புஷ்பா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், கம்பன் விழா பேச்சுப்போட்டியில், தருமபுரி வருவான்வடிவேலன் கல்லூரி மாணவர் தங்கமுத்துக்கு முதல் பரிசு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் கெளதம் இரண்டாம் பரிசு, மதுரைக் கல்லூரி மாணவர் ஹரிஹரன் மூன்றாம் பரிசை வென்றனர். அவர்களுக்கு பரிசுத் தொகையை விழாக்குழுவினர் வழங்கி பாராட்டினர்.இவ்விழா நிறைவில், கம்பன் கழக துணைச் செயலாளர் ஜெ.பாரதி நன்றி கூறினார்.
Next Story
