மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி அமைய இருக்கும் ஒரு வழிப் பாதையை

X
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி உசேன் சாஹிப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில், 469 -ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வருகிற நவம்பர் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, நாகூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் நாகூரில் சாலை வசதிகளை அழகு படுத்த வேண்டும் என நாகூர் ஆண்டவர் தர்கா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக நாகூர் தர்காவை சுற்றிலும் மற்றும் நாகூரில் சில தெருக்களிலும் ஃபேவர் பிளாக் கற்கள் பதிப்பது உள்ளிட்ட சாலை வசதி செய்து தர ரூ.2.48 கோடி மதிப்பீட்டில், டெண்டர் விடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசல் மற்றும் கடைவீதிகளில் இந்த பணி நடைபெற இருக்கிறது. நாகூர் ஆண்டவர் தர்காவில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிய, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், நாகை எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசல் மற்றும் கடைத் தெருவில் வளர்ச்சி பணிகள் வருகிற 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு வியாபாரம் செய்து வரும் வணிகர்களும், நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசல் வழியாக நாள்தோறும் வருகை தரும் பக்தர்களும் வேலை சிறப்புடன் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி அமைய இருக்கும் ஒரு வழிப் பாதையை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாகூரில் செயல்பட்டு வரும் வணிகர் சங்கம், வர்த்தக சங்கம், முஸ்லிம் ஜமாத் மற்றும் சமூக நல அமைப்புகள் ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பணி சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

