நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஆவண வைப்பறையில் இருந்த ரூ.55 ஆயிரத்து 500 பறிமுதல்
நாகை நீதிமன்ற வளாகத்தில், நாகை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தில், நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் முகவர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நாகை சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் நேற்று மதியம் அதிரடியாக நுழைந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர். யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த சார் பதிவாளர் கவியரசு மற்றும் அதிகாரிகளிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஆவண வைப்பறையில் இருந்த கணக்கில் வராத ரூ.55 ஆயிரத்து 500- ஐ பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர்
Next Story