மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |27 Oct 2025 6:23 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் போது மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்நிலைகளை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட முழுவதும் ஒளிபரப்பும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார். இவ்வாகனத்தின் மூலம் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி நாமக்கல் மாவட்ட நீதி மன்ற வளாகம் வரை சென்றது. இப்பேரணியில் எர்ணாபுரம் வேலம்மாள் போதி வளாகத்தினைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், நிலநீர் வல்லுநர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் மழைநீரை சேகரிப்போம், தண்ணீர் மேலாண்மை தமிழகத்தின் முன்னுரிமை, குடிநீரை பாதுகாப்பீர், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புணர் அமைப்போம், முத்தான மழை நீரை முறையாக சேகரிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். இப்பேரணியில் நிர்வாக பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆர்.செல்வராஜூ, உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நிலநீர் வல்லுநர்கள் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


