உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |1 Nov 2025 6:41 PM ISTநாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தாயுமானவர் திட்டத்தினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வீரணம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் வேண்டுகோள்!!
நாமக்கல் மாவட்ட பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: உள்ளாட்சி தினத்தையொட்டி இன்று வீரணம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 99 சதவீதம் பெற்ற கடன்களை உரிய முறையில் செலுத்தி வருகின்றனர். பெற்ற கடன்களை திரும்ப செலுத்தும் பொழுது உங்களது மதிப்பாய்வும் உயரும். மேலும் அதிகளவில் கடனுதவிகளை பெறுவதற்கும், அதன் மூலம் நமது தொழில் மற்றும் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். மகளிர் சுய உதவிக்குழு கூட்டத்திலும் குழு உறுப்பினர்கள் கடன்களை அரசுக்கு முறையாக செலுத்த எடுத்துரைப்பதோடு, அதற்குண்டான வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும். சுய உதவிக்குழுவினர்கள் புதிய பணிகளை மேற்கொண்டு கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி தொழில்முனைவோர்களாக சமுதாயத்தில் உயர்ந்து விளங்க வேண்டும். அனைத்து திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்பட கூடிய திட்டம் என்றால் அது முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீரணம்பாளையம் ஊராட்சியைப் பொறுத்த வரை இத்திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட 104 நபர்கள் பயன்பெறவுள்ளனர். எனவே தாயுமானவர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு கிராம சபை என்பது எப்பொழுதும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசின் திட்டங்களும், அடுத்தடுத்த வளர்ச்சியும் உறுதியாக பெற இயலும். மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை கண்காணித்து, தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முன்கள பணியாளர்களான தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி இயக்குபர்கள் என 8 நபர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அ.பிரபாகரன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.வீ.பழனிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் வெ.முருகன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ம.கிருஷ்ணவேணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story


