கூட்டுறவுத்துறையின் சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட சத்யபிரதா சாகு.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறையின் சார்பில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 09.11.2025 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படும் விற்பனை நிலையம், அங்காடி மற்றும் அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு நாமக்கல் சரகத்தில் செயல்பட்டு வரும் நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, உறுப்பினர்களின் எண்ணிக்கை, மொத்த கடன் நிலுவை, வழங்கப்பட்ட கடன்கள் விவரம், அதற்கான வட்டி விவரம், சங்கம் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் இட்டு வைப்புகள் அதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் கணினி மயமாக்கல் குறித்த விவரங்களை மற்றும் சங்கத்தின் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகளையும் ஆய்வு மேற்கொண்டார். கணினிமயமாக்கலில் சங்க பணியாளர்கள் மேற்கொள்ளும் சிரமங்களை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செயல்படும் பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரத்தினை பார்வையிட்டு, இருப்பு விபரங்களை கேட்டறிந்தார். மேலும், பாமாயில் பாக்கெட் காலாவதி தேதிக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள அரிசி இருப்புகள் எந்த மாதத்தில் வரப்பெற்றுள்ளது என்பது குறித்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமையின் தேவை குறித்தும் வரவு குறித்தும் கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரருக்கு பொருள் வழங்கும் போது பிஓஎஸ் கருவியில் பொருள் எடை போடுவதை சரிபார்த்து, குடும்ப அட்டைதாரரிடம் நேரடி விசாரணை மூலம் பொது விநியோகத் திட்ட சேவை குறித்து கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, விவசாய விளைபொருள் விற்பனை பிரிவில் செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் பருத்தி ஏலம், புதன்கிழமைகளில் ஒருவந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கவளாகத்தில் நடத்தப்பட்டு வரும் வாழைத்தார் ஏலம், கொல்லிமலை தெம்பலம் லாம்ப் சங்கத்தில் நடத்தப்பட்டு வரும் மிளகு ஏலம், சங்கத் தலைமையகத்தில் நடத்தப்பட்டு வரும் கொப்பரை தேங்காய் ஏல நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், சங்கத்தின் மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சங்கத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பொருட்கள் அவற்றின் தரம் மற்றும் விபரங்களை கேட்டறிந்தார். சங்கத்தின் கூட்டுறவு மருந்தகம் நகை கடன் சேவை மையம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் சில்லறை விற்பனை நிலையம் ஆகியவற்றினை பார்வையிட்டார்.தொடர்ந்து, பரமத்தி சாலையில் உள்ள தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்தை ஆய்வு செய்தபோது ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிராண்டட் மருந்துகளின் இருப்பு, விற்பனை விவரங்களை மென்பொருளில் ஆய்வு செய்தார். மேலும் நியூரோ தொடர்பான பிரச்சனைகளுக்கு எந்த வகையான ஜெனரிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன என்ற விவரத்தையும், ஜெனரிக் மருந்துகளுக்கு தள்ளுபடி எத்தனை சதவீதம் வரை வழங்கப்படுகிறது என்ற விவரத்தையும், ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிராண்டட் மருந்துகளின் விலை ஒப்பீட்டையும் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அச்சகம் தொடங்கிய ஆண்டு, உறுப்பினர்கள் விவரம், அச்சகத்தின் வியாபார வளர்ச்சி அரசின் நிதி உதவிகள் அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அச்சுப் பணி ஆணைகள், அச்சகத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் செயல்திறன், அச்சகத்தில் பயன்படுத்தும் பேப்பர் வகைகள் அச்சகத்தின் சிப்பந்தி மற்றும் சாதல்வார் செலவினங்கள் இலாப விவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மோகனூர் சாலை குறிஞ்சி நகரில் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஆய்வு மேற்கொண்டு பண்டக சாலையின் தினசரி பணிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் இங்கு அமைந்துள்ள பண்டகசாலையின் காவேரி சூப்பர் மார்க்கெட் விற்பனை, ஆவின் பாலகம், திருச்சி மெயின் சாலை புதுப்பட்டி அருகில் அமைந்துள்ள பண்டகசலையின் பெட்ரோல் பங்க் விற்பனை குறித்தும் கேட்டறிந்தார்.தொடர்ந்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு மத்தியக் கூட்டுறவு வங்கியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் . மாண்புமிகு மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் மைய வங்கி தீர்வு (core banking solution), துண்டிப்பு அமைப்பை சரிபார்த்தல் (cheque truncation system) ஆகிய பிரிவுகளுக்கான கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும்‌, நாமக்கல்‌ தலைமையக கிளையை நேரில்‌ பார்வையிட்டு, வங்கியின்‌ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்‌ சேவைகளின்‌ விவரத்தை பணியாளரிடம்‌ கேட்டறிந்தார்‌. மேலும், தமிழ்நாடு அரசின்‌ சிறப்பு திட்டமான மகளிருக்கான இ-ஆட்டோ கடன்‌, வீடு அடமானக்‌ கடன்‌, வீட்டு வசதிக்‌ கடன்‌, பணியாளர்‌ வீட்டு வசதிக்‌ கடன்‌ என ஆறு பயனாளிகளுக்கு ரூ.66.00 இலட்சம்‌ கடன்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்/இணைப்பதிவாளர் சந்தானம், முதன்மை வருவாய்‌ அலுவலர்‌ சே.பால்‌ ஜோசப்‌, துணைப்பதிவாளர்கள் பால் ஜோசப் (நாமக்கல் கூட்டுறவு நகர வங்கி, ஜேசுதாஸ் (நாமக்கல் சரகம்), செல்வி, மேலாண்மை இயக்குநர்கள் பாலசுப்பிரமணியம் (நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சகம்), சரவணன் (மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்), மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story