ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்

X
Ramanathapuram King 24x7 |30 Dec 2025 7:39 PM ISTநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதிய பேருந்து நிலைய சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கிழங்கு, வெள்ளரிக்காய், பழங்கள், வேர்க்கடலை மற்றும் ஊசி, பாசி விற்பனை செய்து வந்தனர். கடந்த அக்டோபரில் புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பேருந்துநிலையத்தில் சாலையோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என சாலையோர வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மாவட்ட ஆட்சியர், நகராட்சி தலைவர், ஆணையாளரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் நேற்று சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் தலைமையில் மாவட்ட தலைவர் ஆலடி ஈஸ்வரன், சிறுவியாபாரிகள் சங்க நிர்வாகி ராமமூர்த்தி மற்றும் சாலையோர வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறும்போது: புதிய பேருந்துநிலையம் திறப்பு விழாவுக்கு பின் எங்களை வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் எங்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம். நகராட்சியால் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு, கடந்த செப்டம்பரில் வியாபார அனுமதிக்கு ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்து நிலையத்தில் போக்குவரத்து பிரச்சினை இல்லாத இடத்தில் கடை வைத்து பிழைத்துக் கொள்ள எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story
