விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |31 Dec 2025 9:33 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (29.12.2025) 728.03 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவு 716.54 மி.மீ. இயல்பு மழையளவை விட டிசம்பர் மாத கூடுதலாக 11.49 மி.மீ அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நவம்பர் 2025 மாதம் வரை நெல் 8,201 எக்டர், சிறுதானியங்கள் 82,380 எக்டர், பயறு வகைகள் 11,336 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 30,796 எக்டர், பருத்தி 1800 எக்டர் மற்றும் கரும்பு 9,051 எக்டர் என மொத்தம் 1,43,564 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 594 எக்டர், கத்திரி 365 எக்டர், வெண்டை 284 எக்டர், மிளகாய் 117 எக்டர், மரவள்ளி 2918 எக்டர், வெங்காயம் 3409 எக்டர், மஞ்சள் 2,264 எக்டர் மற்றும் வாழை 2,471 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 1822 மெ.டன், டிஏபி 1221 மெ.டன், பொட்டாஷ் 939 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 361 மெ.டன், காம்ப்ளக்ஸ் 3113 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்கள், இதர சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு உழவர் நல சேவை மையங்கள் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசாணை வழங்கியுள்ளார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 34 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, தெரிவித்தார்.மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விவசாய பெருமக்கள் 180-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். தொடர்ந்து, சென்னையில் கடந்த 16.12.2025 அன்று நடைபெற்ற விழாவில், வேளாண்மைத்துறையின் சார்பில் 2024-25ஆம் ஆண்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், எருமப்பட்டி, புதுச்சத்திரம், பள்ளிபாளையம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 7 விவசாயிகள் (எள், பச்சைப்பயறு, கம்பு, கரும்பு, நெல் ஆகிய பயிர் வகைகள்) வெற்றி பெற்று ரூ.11.00 இலட்சம் பரிசு தொகையினை பெற்றனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அவர்களிடம் விவசாயிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன், துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story


