தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

நுண்ணீர் பாசனம் (Micro Irrigation) என்பது பயிர்களுக்குத் தேவையான நீரை மிகத் துல்லியமாகவும், சிக்கனமாகவும் வழங்கும் ஒரு நவீன விவசாய நுட்பமாகும், இதில் சொட்டு நீர் பாசனம் (Drip Irrigation) மற்றும் தெளிப்பு நீர் பாசனம் (Sprinkler Irrigation) ஆகியவை அடங்கும். நீர் மற்றும் உரங்களை வேர்ப்பகுதிக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் மகசூலை அதிகரித்து, நீரைச் சேமிக்க உதவுகிறது.அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், ரூ.50.45 கோடி மானியத்தில் 6,684 விவசாயிகளுக்கு 100% மற்றும் 75% மானியத்தில் மழைதூவுவான் மற்றும் சொட்டு நீர் பாசனமும், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.12.03 கோடி மானியத்தில் 42,103 விவசாயிகளுக்கு, உயிர் உரங்கள் செயல் விளக்கங்கள் மற்றும் விதைகள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், 10,098 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் என மொத்தம் ரூ.103.91 கோடி மானியமும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 8,028 பயனாளிகளுக்கு பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் உள்ளிட்ட இனங்களின் கீழ் ரூ.8.74 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் , வேளாண்மைத்துறையின் சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் வட்டாரம், சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் திருமதி ஜீவிதா என்ற விவசாயி 0.57 எக்டர் பரப்பளவில் ரூ.73,068/- மானியத்தில் கரும்பும், அதே பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் திரு.பழனிசாமி என்ற விவசாயி 1.21 எக்டர் பரப்பளவில் ரூ.1,60,760/- மானியத்தில் மஞ்சளும், திருச்செங்கோடு வட்டாரம் ஆனங்கூர் பகுதியில் வரதராஜன் என்ற விவசாயி 0.68 எக்டர் பரப்பளவில் ரூ.80,400/- மானியத்தில் மரவள்ளியும் பயிரிட்டு சாகுபடி செய்வது வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில் எலச்சிபாளையம் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைத்துள்ளதை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து பயனாளியிடம் கேட்டறிந்தார்.முன்னதாக, குமாரபாளையம் வட்டம், சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் மூலம் கரும்பு கொள்முதல் செய்தல் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுகளின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.


Next Story