ராமநாதபுரம் காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

தொடர்ந்து புகார்கள் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு குடும்பம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அடுத்த சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சாமி என்பவர், தனது தம்பி மற்றும் குடும்பத்தாருடன் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்த நிலையில், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தெரிவித்ததாவது, என் இளைய சகோதரர் ஆட்டோ ஓட்டுநராக தொழில் செய்து வருகிறார். ஆனால், அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் ‘ஆட்டோ சங்கம்’ என்ற பெயரில், அவரை ஆட்டோ ஓட்ட விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு என் சகோதரரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது என்றார். இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் குறித்து காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் நீதிமன்றத்தை நாடி வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். வழக்கு தொடர்ந்த பின்னரும் ‘உன்னால் என்ன செய்ய முடியும் பார்’ என்று தொடர்ந்து மிரட்டுகின்றனர். என் சகோதரனும், குடும்பத்தாரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். புகார் மனுக்கள் கொடுத்தும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். காவல்துறையின் இந்த அலட்சிய போக்கு காரணமாகவே, கடைசி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தங்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். தர்ணா போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரை சமாதானப்படுத்தி, ஆட்சியரிடம் நேரடியாக புகார் மனு வழங்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
Next Story