தேர்தல் நேரத்தில் அதிமுக மக்களை திசை திருப்புவதாக கே.எஸ்.மூர்த்தி கண்டனம்
Paramathi Velur King 24x7 |5 Jan 2026 7:48 PM ISTதேர்தல் நேரத்தில் அதிமுக மக்களை திசை திருப்புவதாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
பரமத்திவேலூர்,ஜன.6: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்திலிருந்து கொடுமுடிக்கு காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிப்பு வெளியிட்டும் திமுக அரசு அதனை கிடப்பில் போட்டுள்ளதாக கூறி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்குப் பதில் அளிக்க நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்தி, கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் (கே.எஸ்.மூர்த்தி) கடந்த 2017 ஜூன் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், காவிரி ஆற்றின் குறுக்கே பிலிக்கலபாளையதையும் கொடுமுடி ஆவுடையார்பாறைபகுதியையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே போக்குவரத்து பாலம் அமைத்துக் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தேன் . அவ்வாறு பாலம் அமைக்கும் பட்சத்தில் ஈரோடு,கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்ககளுக்கு வசதியாக இருக்கும். எனவே காவேரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இதை அடுத்து அப்போது அதிமுக அரசின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பாலம் அமைக்க அறிவிப்பு செய்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது. பாலம் அமைக்க ரூ.32.50 லட்சம் மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான நில எடுப்பு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட வருவாய் துறை மூலம் நிலங்களை கையகப்படுத்த நிலத்திட்ட அட்டவணை அனுப்பப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்து பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்களிடம் விவசாயிகளின் நலன் காக்கவும், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் மக்களின் வசதிக்காகவும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைத்து, அமைத்து மின்வாரியத்துறை மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இதற்காக தற்போது நில எடுப்பிற்கு திருத்திய நில கையக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு சென்னை நில எடுப்பு திட்ட அட்டவணை சரிபார்க்கப்பட்டு பரிந்துரைக்கு பின்னர், அரசுக்கு ரூ 19.40 கோடிக்கு நில எடுப்பிற்கான நிர்வாக ஒப்புதல் பெறுவதற்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை மூலம் முன்மொழியப்பட்டுள்ள இந்த உயர்மட்ட பாலப்பணியுடன் தமிழ்நாடு மின்வாரியத்துறையின் நீர்மின் திட்டத்தை இணைத்து செயலாக்கம் செய்ததில் நில எடுப்பு மற்றும் திட்ட மதிப்பீட்டில் மாறுதல்கள் ஏற்படக்கூடிய வகையில் உள்ளதால் தற்போது நில எடுப்பிற்கான அரசாணை வழங்குவது ஒத்தி வைக்க வேண்டி தலைமை பொறியாளருக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் நில எடுப்பு மற்றும் பாலம் கட்டுமான பணி தொகை போன்றவற்றை தமிழ்நாடு மின்வாரியத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள நீர் மின் திட்டத்துடன் இணைத்து செய்ய வலியுறுத்தியும் மேற்கண்ட மின்வாரியத்துறை தலைமை பொறியாளரால் தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்தை இணைக்கும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களின் திராவிடர் மாடல் ஆட்சியில் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில், பரமத்திவேலூர் சட்ட மன்ற உறுப்பினர் சேகர் ஆகியோர் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் எனவும், அதனை திமுக அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும் கூறியும், இத்திட்டத்தை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர். மக்களை ஏமாற்றி வரும் அதிமுகவை நாமக்கல் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது கபிலர்மலை தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சாமிநாதன், கபிலர்மலை மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் வக்கீல் சரவணகுமார், வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம், பொத்தனூர் பேரூர் கழக செயலாளர் கருணாநிதி, வெங்கரைப் பேரூர் கழக செயலாளர் இராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய ,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி பொறுப்பாளர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story


