ராசிபுரத்தில் பொதுபாதையை தனிநபர் ஆக்கிரமித்து சுவர் எழுப்புவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

X
Rasipuram King 24x7 |6 Jan 2026 8:13 PM ISTராசிபுரத்தில் பொதுபாதையை தனிநபர் ஆக்கிரமித்து சுவர் எழுப்புவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் வெங்கடசாமி தெரு உள்ளது. அங்கிருந்து டி.வி.எஸ். சாலைக்கு செல்லும் வகையில் பொதுப்பாதை ஒன்று இருந்து வந்தாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவர் அதை மறித்து சுற்றுச்சுவர் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2023-ம் ஆண்டில் அந்த இடத்தை வேறு ஒருவர் வாங்கியதோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்ட ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆழ்துளை கிணறு அமைக்க விடாமல் தடுத்ததோடு, அங்கிருந்த சுற்றுச்சுவரையும் இடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி நிர்வாகத்திடமும் ஆவணங்களை சமர்ப்பித்து பொதுப்பாதையை மீட்டுத் தரக் கோரி மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று ஏற்கனவே இடிக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கு இடத்தின் உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசிபுரம் டி.வி.எஸ். சாலையில் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களிடம் பட்டா இருப்பதாகவும், முறையாக வரி செலுத்தி வருவதாகவும் ஏற்கனவே இருந்த சுற்றுச்சுவரை சிலர் இடித்து விட்டதால் மீண்டும் கட்ட உள்ளதாக இடத்தின் உரிமையாளர் கூறினார். ஆனால் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதைக்கு முறைகேடாக ஆவணங்களை தயாரித்து தனிநபர் ஆக்கிரமித்து இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி விஜயகுமார் கூறியதன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
