போதமலையில் கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்படும் என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்பி ராஜேஸ்குமார் தகவல்....

X
Rasipuram King 24x7 |8 Jan 2026 7:09 PM ISTபோதமலையில் கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்படும் என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்பி ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், அட்மா தலைவர் கே.பி.ஜெகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.ஆர். சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம் கடந்த, 1996 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளால் மக்கள் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, நகராட்சி முழுவதும் சுமார், 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. தமிழக அரசு பெண்களின் உரிமைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் மாதம், 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த, 27 மாதங்களாக தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்திலும் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர், 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இதன் மூலம் ராசிபுரம் நகராட்சி, சிராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து, நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 33 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஆண்டலூர் கேட் பகுதியில் டைடல் பார்க் கட்டும் பணி நடக்கிறது. மேலும், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளும், நாமக்கல்லில், 400 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை பணிகளும் நடந்து வருகின்றன. போதமலைக்கு ரோடு போடும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. பொங்கல் அன்று அங்கு புதிய கூட்டுறவு சங்கம் தொடங்கி வைக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.க.ப. அருளரசு, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திரு.மா. சரவணன், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் துணைப் பதிவாளர் திரு.பி. திருநாவுக்கரசு, கூட்டுறவு சார் பதிவாளர்கள் திருமதி மா. தேவகி, திருமதி த. சிவரஞ்சனி, ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் திருமதி.பி. சாந்தி, ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்க உதவி மேலாளர்கள் திரு.என். குணசேகரன், திரு.எஸ். ரத்தினவேல் மற்றும் பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
