திருவண்ணாமலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம். சட்டப்பேரவை துணைத்தலைவர் பார்வையிட்டு ஆய்வு.

X
Arani King 24x7 |11 Jan 2026 12:46 PM ISTஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஆரணி, திருவண்ணாமலை மாநகராட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார். ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே கட்டணமில்லா சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திருவண்ணாமலை மாநகராட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆய்வு மேற்கொண்டு சிறப்புரையாற்றியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி நலம் காக்கும் ஸ்டாலின் என்ற உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆக 2 முதல் தொடங்கப்பட்டு தற்போது வரை 39 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் வாயிலாக இதுவரை 58ஆயிரத்து 933 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். 39 ஆயிரத்து 848 நபர்களுக்கு இரத்த பரிசோதனைகளும், 26ஆயிரத்து 827 நபர்களுக்கு இசிஜி பரிசோதனைகளும், 4 ஆயரத்து 293 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகளும், 4ஆயிரத்து 127 நபர்களுக்கு எக்கோ பரிசோதனைகளும், எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18ஆயிரத்து 366 அமைப்புசார தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுக்கான அட்டைகள் 2ஆயிரத்து 772 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பான முறையில் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அதிக அளவில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சை இம்முகாமின் மூலம் அளிக்கப்படுகிறது. நான் காக்கும் ஸ்டாலின் திட்டமானது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் நமது மாநிலத்தில் இருக்கிறது. பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி தமிழ்நாட்டில் செலுத்தப்படவிருக்கிறது. மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதனைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். அதனை தொடர்ந்து சட்டப்பேரவை துணைத்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், கலைஞரின் கண்ணொளிக் காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்கள். இம்முகாமில் திருவண்ணாமலை மாநகராட்சி நிர்மலா வேல்மாறன், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் வெ.பிரகாஷ், திருவண்ணாமலை நகர நல அலுவலர் வீராசாமி மோகன் குமார், காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசுத்துறைச் சார்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
