கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மணவாசி ஊராட்சி மன்றம் முன்பாக இருந்த சங்க பெயர் பலகையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதியத்தை வழங்கிடுதல், ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு தொகையும் முறையாக செலுத்திடுக, பணிக்காலத்தில் இறந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய காப்பீடு தொகையை வழங்கிட கால வரம்பை நிர்ணயம் செய்திடுதல், மூன்று ஆண்டுகள் பணி முடிந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியதாரர்களாக மாற்ற உரிய நடவடிக்கை எடுத்திடுதல், தூய்மை காவலர்களின் ஊதியத்தை ஊராட்சி நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்,அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், சொந்த வீட்டு மனை இல்லாத குடும்பங்களுக்கு இலவசவீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். இதில் சிஐடியூ நிர்வாகிகள் ராஜா முகமது, சுப்ரமணியன் அரவிந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story