மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது.

மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி பாலத்தின் வழியாக மருங்காபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பெரிய அளவிலான காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றிய பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் இந்த மெகா சைஸ் குழாய் மிகவும் சேதமடைந்து உள்ளது. அதனால் இந்த குழாயில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு காவிரி குடிநீர் வீணாக செல்லும் நிலையில் இன்று மாலையும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு மேல் காவிரி நீர் பீறிட்டு வெளியேறி ஆற்றில் வீணாக சென்றது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் குடிநீர் வழங்கல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அதிக திறன் கொண்ட மின்மோட்டார் நிறுத்தப்பட்டதை அடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் குடிநீர் வீணாவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது மக்களை வேதனையடையச் செய்தது. காலையில் மணப்பாறை அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள மஞ்சம்பட்டி அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிய நிலையில் மாலையில் கலிங்கப்பட்டி பாலத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. இந்நிலையில் சேதமடைந்துள்ள பழைய கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை மாற்றி புதிய குழாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story