இராசிபுரத்தில், நகர பாஜக சார்பில், நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |16 Jan 2026 6:29 PM ISTஇராசிபுரத்தில், நகர பாஜக சார்பில், நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் பங்கேற்பு...
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, தைப் பொங்கல் உள்ளிட்ட தமிழர்களின் பல்வேறு திருவிழாக்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நகர பாஜக சார்பில், நம்ம ஊரு மோடி பொங்கல் விழா (15.01.2026) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர். கே.பி. இராமலிங்கம், நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், இராசிபுரம் நகர பாஜக புதிய அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில் இராசிபுரம் நகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டு, பொங்கல் வைத்தனர். முன்னதாக, பொங்கல் வைத்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண கோலங்கள் வரைந்து, கரும்புகள் கட்டப்பட்டு அழகு செய்யப்பட்டன. இந்த விழாவில் இராசிபுரம் நகரை சேர்ந்த சிலம்பாட்டக் கலைஞர்கள் கலந்துகொண்டு, சிலம்பம் , சுருள், வாள், மான் கொம்பு, தீப் பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட சிலம்ப விளையாட்டுகளை நிகழ்த்திக் காட்டினர். தொடர்ந்து விழாவில் பொங்கல் வைத்த மகளிர் மற்றும் சிலம்பம் சுற்றிய வீரர்கள் ஆகியோருக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், புதிதாக பாஜக-வில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பொன்னாடை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிப் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம், அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் கூறிய அவர், தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில், கடந்த 11-ம் தேதி முதல் பல்வேறு கிராமங்களில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை இந்த விழா பெற்றுள்ளது. நமது நாடு நூற்றாண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்ற 2047-ம் ஆண்டு, வளர்ச்சி அடைந்த, வலிமையான பாரதமாக, வல்லரசு நாடாக உருவாக்கி காட்டுவேன் என்ற இலட்சியத்தோடு உழைத்துக் கொண்டிருக்கின்ற பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலக நாடுகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு, ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு நகரமும் வலிமை பெற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பாரத பிரதமர் வழங்கிக் கொண்டிருக்கிறார். அதன்படி, கொரோனா காலத்தில் உலகமே சோர்ந்து போயிருந்த நேரத்தில், கொரோனாவுக்கு முதன்முதலாக நமது நாடு தடுப்பூசிகளை கண்டறிந்து, அதனை நமது மக்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், 66 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகைக் காப்பாற்றிய உத்தம தலைவர் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆவார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு செயல்படுத்தி வருவதால்தான், நம்ம ஊரு மோடி பொங்கல் என்று பெருமையோடு கொண்டாடி வருகிறோம். தமிழர் திருவிழாவான பொங்கல் திருவிழாவை நேற்று புதுடில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நமது மத்திய அமைச்சர் Dr. முருகன் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார். இதுவரை எந்த பிரதமரும் பொங்கல் விழாவை முன்னின்று நடத்திய வரலாறு கிடையாது. ஆனால், நமது பாரத பிரதமர், கடந்த பல ஆண்டுகளாக, அவரே கலந்துகொண்டு பொங்கல் திருவிழாவை நடத்தி வருகிறார். அவரது வழியில் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறோம். இராசிபுரம் நகர பாஜக அலுவலகம், இந்த தைப்பொங்கல் நன்னாளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாறுகின்ற நிலை வரவேண்டும். அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழகத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கு, நீங்கள் அத்தனை பேரும் உறுதுணையாக இருந்து உழைக்க வேண்டும். கட்சிப் பணிக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் நற்பணிக்கும் இந்த அலுவலகம் பயன்பட வேண்டும் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் கேட்டுக்கொண்டார். இந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில், பாஜக நிர்வாகிகள் வேல்முருகன், சேதுராமன், சுகன்யா, இளங்கோ, தமிழரசு, அசோக், திவ்யா, அணி பிரிவு நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
