மருதூரில் சாலை ஓரத்தில் வளர்ந்த செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

விபத்து ஏற்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மருதூரில் இருந்து மேட்டுமருதூர் வழியாக பணிக்கம்பட்டி வரை தார் சாலை செல்கிறது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் செடி கொடிகள் நன்கு வளர்ந்து புதர் மண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் சாலையின் அகலம் குறுகி உள்ளது. மருதூர் ரயில்வே குகைவழி பாதையிலிருந்து மேட்டுமருதூர் செல்லும் சாலையில் ஆங்காங்கே வளைவு பகுதியில் நாணல் செடிகள் நன்கு வளர்ந்துள்ளதால் எதிர்வரும் வாகனங்கள் வளைவில் தெரியாததால் விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. மேலும் வெளியூர் சென்று இரவு நேரத்தில் வீடு திரும்ப நடந்து செல்லும் கூலி தொழிலாளிகள், மிதிவண்டிகளில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் முன்னர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story