நினைவில் வாழும் நாமக்கல் மாவட்ட படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய இலக்கிய கருத்தரங்கம்!

நினைவில் வாழும் நாமக்கல் மாவட்ட படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய இலக்கிய கருத்தரங்கம்!
X
மோகனூர் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில், தமிழறிஞா் கி.வா.ஜகந்நாதன் எழுதிய புத்தகங்களை கல்லூரி நூலகத்துக்கு "கிரீன் பார்க்" குருவாயூரப்பன் வழங்கினார்.
சாகித்திய அகாதெமி மற்றும் மோகனூர் சுப்பிரமணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து நினைவில் வாழும் நாமக்கல் மாவட்டப் படைப்பாளர்கள் இலக்கிய அரங்கு கல்லூரியின் கரையரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கி.வா. ஜகந்நாதன், சிலம்பொலி செல்லப்பனார், கு.சின்னப்பபாரதி ஆகியோர்களின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. * நிகழ்விற்கு வருகை தந்தவர்களை கல்லூரியின் தமிழ்த் துறை உதவி பேராசிரியை முனைவர் து. கலைச்செல்வி வரவேற்று பேசினார். இந்த நிகழ்விற்கு கல்லூரியின் தாளாளர் முனைவர் சு. பழனியாண்டி தலைமை தாங்கினார். நினைவில் வாழும் மாவட்ட படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.ந. அமுதா வாழ்த்துரை வழங்கினார். மேலும் நாமக்கல் தங்கம் மருத்துவ மனையின் மருத்துவர் குழந்தைவேல் வாழ்த்துரை வழங்கினார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழ்வும் படைப்புகளும் குறித்து முனைவர் அரசு பரமேஸ்வரன் சிறப்புரையாற்றும் போது* திலகர் விதைத்த விதை பாரதி என்றால் காந்தி விதைத்த விதை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. இவரின் கவிதைகள் சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் பங்கு வகித்தது என்று பேசினார்.மலைக்கள்ளன் நாவலை தந்த நாமக்கல் கவிஞரின் காலில் விழுந்து வணங்கினார் எம்ஜிஆர் என்ற பெருமைக்கு உரியவர் நாமக்கல் கவிஞர் மட்டுமே,
மேலும் நாமக்கல் கவிஞர் எழுதிய திருக்குறள் உரை மிகவும் எளிமையாக இருக்கும் என்று பேசினார்,நாமக்கல் கிரீன் பார்க் கல்வி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் முனைவர் சு. குருவாயூரப்பன், கி. வா.ஜகந்நாதனின் வாழ்வும் படைப்புகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றும் போது சிலேடையில் தனித்துவம் பெற்றவர், அவருடைய பல்வேறு நூல்களை படித்த போது எனக்கு அவரைப் பற்றி சிலடையாக சொல்வதென்றால் அக்கரைக்கு சென்று(மோகனூரில் இருந்து வாங்கல்) சென்று அக்கறையாக பள்ளி படிப்பை படித்தவர் கி.வா.ஜ.,
பன்மொழி கற்றவர்,குரு பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்தவர், பிறமொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். மோகனூர் காந்தமலை முருகனை பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார், இலக்கிய சொற்பொழிவுகளையும் ஆற்றி உள்ளார் என்று தனது உரையில் எடுத்துரைத்தார்.மேலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் செ.செந்தில்குமார் சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்வும் படைப்புகளும் என்ற தலைப்பில் பேசும்போது...
சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்றும் புரட்சிக்காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. பட்டித் தொட்டி எங்கும் சிலப்பதிகாரத்தை கொண்டு சேர்த்தவர் சிலம்பொலி செல்லப்பன். அதீத நினைவாற்றல் கொண்டவர்,1000க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளார், அந்த அணிந்துரையை 6 தொகுதியாக வெளியிட்ட பெருமை சிலம்பொலி செல்லப்பனை சாரும்,இவருக்கு ரா. பி சேதுப்பிள்ளையால் சிலம்பொலி பட்டம் வழங்கப்பட்டது என்று பேசினார்,மேலும்
நாமக்கல் கம்பன் கழகத்தின் பொருளாளர் பசுமை மா. தில்லை சிவக்குமார் சின்னப்பபாரதியின் வாழ்வும் படைப்புகளும் குறித்து சிறப்புரையாற்றும் போது
பாரதியை தேடித்தேடி படித்தவர் அதனால் தான் சின்னப்பன் என்ற தனது பெயரை பாரதி மேல் உள்ள பற்றால் சின்னப்பாரதி என்று மாற்றி வைத்து கொண்டார்.60 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை பழங்குடி மக்களின் அவர்கள் படும் அவலங்களை அங்கேயே தங்கி சங்கம் என்ற நாவலை எழுதியுள்ளார். அந்த நாவலை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்தனை மாற்றத்தை மண்ணில் விதைத்தவர் எளிய மக்களின் வாழ்வியல் முறைகளை நாவலாக வடித்தவர் சின்னப்பாரதி. பாரதியார் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நடத்தினார். மேலும் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வியல் முறைகளை நாவலாக வடித்தவர் என்ற பெருமையை சின்னப் பாரதியே சேரும் என்றார்.இந்த நிகழ்வில், மோகனூா் 10 ரூபாய் மருத்துவா் ஜகந்நாதன், கு.சின்னப்பாரதியின் புதல்வி கல்பனா, மற்றும் தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் இரா.சக்திவேல் நன்றி கூறினார்.
Next Story