காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள், பெண்கள் சேர்த்து கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன்!-நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் பதவியேற்பு விழாவில் சூளுரை

நடிகர் விஜய் கட்சியில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் டாக்டர் செந்தில் முன்பாக இணைந்து கொண்டனர்.800க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடலாக சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள், பெண்கள் சேர்த்து கட்சி வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன். என மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் பி.வி.செந்தில், நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் பதவியேற்பு விழா நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, டாக்டர் செந்திலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் பி.ஏ.சித்திக் புதிய மாவட்ட தலைவர் செந்திலை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. தற்போது அனைத்து மதம், இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்து புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளது.அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து உள்ளனர்.காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு புதிய மாவட்ட தலைவர் டாக்டர் செந்தில் செயல்பட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் பேசியதாவது...
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை முக்கிய விளைபொருட்களாக உள்ளது. கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் கிணறுகள் வறண்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே காவிரி உபரி நீரை சரபங்கா மற்றும் திருமணி முத்தாறுடன் இணைப்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் மட்டும் உயரும்.
நாமக்கல்லில் கோழி வளர்ப்பு, முட்டை ஏற்றுமதி, லாரி போக்குவரத்து மற்றும் ரிக் வண்டிகள் மற்றும் ஜவுளி உற்பத்தித் தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு வரி விதிப்பால் இந்த தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இதனால் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. வேலைவாய்ப்புக்காக மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக நாமக்கல் சட்டசபை தொகுதியில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறை இணைப்பதற்கும், தொழில் வளத்தை பெருக்குவதற்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் இராஜேஸ்குமார், மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து மாவட்டத்திற்கான திட்டப்பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள் உள்ள விருப்பு வெறுப்புகளை மறந்து தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த பாடுபட வேண்டும் என அவர் கூறினார்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் வா்த்தக அணி செயலாளா் குரு இளங்கோ நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் அனுப்பிய வாழ்த்து செய்தியை வாசித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக புதிய மாவட்டத் தலைவர் டாக்டர் செந்தில் அவர்களுக்கு கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து முதலைப்பட்டி பைபாஸ் சாலையில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 100க்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நகர் முழுவதும் ஊர்வலமாக புதிய தலைவரை அழைத்து வந்தனர்.
பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தி அம்மையாரின் சிலைகளுக்கும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 800க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தடபுடலாக சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில், நடிகர் விஜய் கட்சியில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் டாக்டர் செந்தில் முன்பாக இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி,முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், செல்வராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், தங்கராஜ்,இளங்கோ,குப்புசாமி, மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், சாந்திமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துரையை வழங்கினர். ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story