மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கார்கூடல் பட்டி கிராமம் மெட்டாலா பகுதியில் கிராம பஞ்சாயத்து பொதுவழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த நாட்களில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் ஆடு, மாடுகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தை தூண்டியதாக கூறி, மெட்டாலா பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் மீது ராசிபுரம் வட்டாட்சியர் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் பொய்யான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.மேலும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வரும் ரியல் எஸ்டேட் அதிபர் நல்லுசாமி என்பவருக்கு ராசிபுரம் வட்டாட்சியர் ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அரசு நில ஆக்கிரமிப்பை தடுப்பதில் அலட்சியம் காட்டுகிறார் என்றும் மக்கள் குற்றம் சாட்டினர்.இதனை கண்டித்து, ராசிபுரம் வட்டாட்சியர் மீது உடனடி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மெட்டாலா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்

Next Story