நாமக்கல்லில் டி.எம்.காளியண்ண கவுண்டர் 104வது பிறந்தநாள் விழா!-நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயர் சூட்ட முதல்வருக்குக் கோரிக்கை!

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மறைந்த டி.எம்.காளியண்ணன் அவர்களது 104வது பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது
இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டமன்றத்திலும் என முதல் மூன்று சபைகளிலும் உறுப்பினர் என்ற பெரிமைக்குரியவரும், மகாத்மா காந்தி,பண்டித ஜவஹர்லால் நேரு, சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் என மூத்த அரசியல் தலைவர்களுடன் இணைந்து தேசிய அரசியலில் பயணித்தவரும், நாமக்கல் மண்ணின் மைந்தருமான கர்மயோகி டி.எம். காளியண்ணன் ஐயா அவர்களது 104வது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக இதில் பங்கேற்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலை அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஐயாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஐயாவின் பேரனும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடர்பாளர் மற்றும் மாநில துணைத் தலைவர் (ஓபிசி) பிரிவு டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சித்திக் மற்றும் நகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அன்னாரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டாக்டர் செந்தில் தலைமையுரை ஆற்றி பேசுகையில்.....
இன்றைய தினம் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஐயா கர்மயோகி டி.எம். காளியண்ணன் அவர்களது‌ பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஏற்பாடு செய்த கட்சியின் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார், மாநிலத் தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த 1950ம் ஆண்டு சமுதாயத்தில் நலிவடைந்த, பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து செயல்பட்டவர் காளியண்ணன் என்றும், பிரெஞ்சு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழூர் புரட்சியை ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாக முடித்து புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றி தேசத்திற்கு வலிமை சேர்த்தவர்," என்றும் கூறினார். மேலும்
இன்றைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவராக செயல்பட்டு, இப்பகுதியில் 2000 பள்ளிகளைத் திறந்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதுடன் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட மக்கள் காவிரி நீரை தங்களது பாசன வசதிக்கு பயன்படுத்தும் வாழ்வாதார உரிமையை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்து இப்பகுதியின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்,
" என்றும் கூறினார். இவை தவிர, மோகனூர் சர்க்கரை ஆலை, பள்ளிபாளையம் காகித ஆலை, சங்ககிரி சிமெண்ட் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளை நிறுவி தொழிற்புரட்சிக்கு அடித்தளமிட்டதுடன், இப்பகுதியின் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியும்,இதுமட்டுமின்றி கொல்லிமலைக்கு உலகப் புகழ்பெற்ற சாலை வசதி, ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள்,பெண்கள் முன்னேற்றத்திற்கு என பிரத்யேக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியலிலே கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்று பேசினார்.
கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் பி.கே. வெங்கடாசலம் பேசுகையில் ..
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கும் ஐயாவின் பிறந்த நாள் வாழ்த்து கூறியமைக்காக தனது குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இறுதியாக,
கொங்கு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஐயா கர்மயோகி காளியண்ணன் அவர்களது‌ பெயரை சூட்ட வேண்டும் என்றும், அன்னாருக்கு அரசு சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்கவும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை‌ வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், பரமத்திவேலூர் நகர தலைவர் பெரியசாமி, ராசிபுரம் நகர தலைவர் முரளி, வட்டார தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, மோகனூர் சீனிவாசன், எருமப்பட்டி தங்கராசு, பரமத்தி வேலூர் சந்திரன், எஸ்பி/எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பொன்முடி, கொல்லிமலை குப்புசாமி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story