தமிழில் பெயர் பலகை வைக்க மே.15 வரை கால அவகாசம் - ஆட்சித்தலைவர்

X
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க மே 15 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளின் படி பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும். இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டப்படியும், தொழிற்சாலைகள் சட்ட விதிகளின் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைப்பதை கண்காணித்திட மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் தொழிலாளர் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கண்காணிப்புக் குழுவின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடுத்த மாதம் மே-15-ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே தமிழில் பெயர் பலகை வைக்க மே-15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

