நாகை அருகே திருக்குவளையில் சுமார் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஆயி குளம் முழுவதும் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

X
Nagapattinam King 24x7 |31 Dec 2025 3:37 PM ISTதிருக்குவளை செய்தி
நாகை மாவட்டம், திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட சாட்டியக்குடி பிரதான சாலையில், தருமபுரம் ஆதீனத்தின் கீழ் உள்ள திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ஆயி குளம், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது. இதன் காரணமாக குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்து, குளத்தின் நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைகளான துணி துவைப்பு, குளியல், பாத்திரம் துவைப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக இந்த ஆயி குளத்தின் நீரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஆகாயத்தாமரைகள் மண்டியிருப்பதோடு மட்டுமின்றி, அழுகிய செடிகள் குளத்திலேயே தேங்கி இருப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த குளத்தில் குளித்தாலோ அல்லது அதன் நீரை பயன்படுத்தினாலோ அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குளத்தின் நீரை பயன்படுத்த மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், குளம் பயன்பாடற்றதாக மாறியுள்ளது.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே ஆயி குளத்தில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றவும், குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, புதிய நீர் நிரப்பி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
