அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது நாள் இலக்கியத் திருவிழா
Ariyalur King 24x7 |11 Jan 2025 12:13 PM GMT
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது நாள் இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
அரியலூர், ஜன.11- அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட மைய நூலகம் நடத்தி வரும இளைஞர் இலக்கியத் திருவிழாவின் 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆவணத் தொகுப்பு மற்றும் விவாத மேடை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட மைய நூலக அலுவலர் இரா.வேல்முருகன், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், தமிழ்த்துறை தலைவர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், தமிழரின் மொழி வளம், பண்பாடு, நாகரிகம் கண்டு உலகமே இன்றும் வியந்து நிற்கிறது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் அதன் வளமையாலும், சிறப்பாலும், சீர்மிகு இலக்கியப் படைப்புகளாலும் உலக அரங்கில் இன்றும் என்றும் மாபெரும் அங்கீகாரமும், சிறப்பும் உண்டு என்றால் அது மிகையல்ல.வெளிநாடு பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைப்பதும், தமிழ் மொழியின் தொன்மையினை அறிய கல்வியாளர்களும், மொழி ஆர்வலர்களும் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழின் வளமையை, தமிழரின் பெருமையை உலகறியச் செய்கின்றன.2,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளைக் கொண்ட அமுதமொழி நம் தாய் மொழி. அஃது இன்பத் தேன்மொழி, இலக்கியச் செம்மொழி. இது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள், வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து இயம்புகின்ற உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்று கடந்துபோன வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கவும், நாளைய வாழ்க்கை நிகழ்வுகளை அறத்தின் வழிநின்று சீர்தூக்கிச் செம்மைப்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுவதே நம் இலக்கியங்கள். நேற்றைய அறநெறி வழியில் நின்று, இன்றைய சமூகத்தைச் செம்மைப்படுத்தி, நாளைய உலகை புதிதாய்ப் படைக்க வழிகாட்டும் ஒளிவிளக்கே நம் தமிழ் இலக்கியங்கள் என்றனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆவணத்தொகுப்பு, தொன்மை தொடர்ச்சி, விவாத மேடை போட்டிகளில் 41 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர். போட்டிகளின் நடுவர்களாக பேராசிரியர்கள் குணசுந்தரி, மரகதம், பொற்கொடி, வசந்தி, குமார், ராமதாஸ் ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏர்பாடுகûளை நூலகர்கள் செசிராபூ, நாராயணசாமி, ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக பேராசிரியர் மரகதம் வரவேற்றார். முடிவில் நூலகர் முருகானந்தம் நன்றி கூறினார்.
Next Story