காவேரிப்பாக்கம்:அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்- 2பேர் கைது!

X
காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 48). காஞ்சீபுரம் அரசு போக்குவரத்து பணிம னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள வேலி மரத்தை வேரோடு பிடுங்கி உள்ளார். இதனைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த சரவணன் (52) என்பவர் தினகரனிடம், நான் தான் இந்த கோவில் தர்மகர்த்தா, என்னைக் கேட்காமல் ஏன் மரத்தை பிடுங்குகிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி, ஆவேசம் அடைந்த சரவணன் மற்றும் அவரது மகன் சவுந்தர் (29) ஆகிய இருவரும் தினகரனைதாக்கியுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த தினகரனை அப்பகுதி பொதுமக்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தினகரன் நேற்று அவளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து, சரவணன் மற்றும்சவுந்தரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story

