விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள்

X

அபராதம் விதிக்கும் வகையில் விதி மீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் ஏ.ஐ தொழில் நுட்பத்துடன் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 200 கேமராக்களை நிறுவ போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விபத்து, விபத்து உயிரிழப்புகளை குறைக்கவும், விரைவான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் சாலை சந்திப்புகளில் நின்றவாறு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து போலீஸார் தற்போது ஆங்காங்கே நவீன கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போனுக்கே குறுந் தகவல்களாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் தானியங்கி கேமராக்களும், விதி மீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அதுவாகவே அபராதம் விதித்து விடுகிறது. வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் விதி மீறல் தொடர்பான புகைப்படங்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக சென்னை போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கும் முறையில் ஏ.ஐ தொழில் நுட்பத்தையும் புகுத்தி உள்ளனர். முதல் கட்டமாக சென்னையில் இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்களில் ஏஐ தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் மேலும் 200 கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தானியங்கி கேமரா உள்பட பல்வேறு கேமராக்கள் சாலையின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. அதில், பதிவாகும் காட்சிகள் மூலம் விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதி மீறலை புகைப்படமாக எடுத்து அதை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். அதன் துல்லியத்தன்மை ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதி மீறல் வாகன ஓட்டிகள் தப்பிக்கவே முடியாது. இதனால், விதி மீறல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவது உறுதி என்ற எண்ணம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும். வாகன ஓட்டிகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சாலை விதிகளை மீறாமல் நடந்து கொள்வார்கள். இதன் மூலம் விபத்துகளும், விபத்து உயிரிழப்புகளும் வெகுவாக குறையும் என்றனர். இது ஒருபுறம் இருக்க ரேடார் பொருத்தப்பட்ட சில வாகனங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் 360 டிகிரி அளவுக்கு சுழன்று படம் பிடிக்கும் கேமராக்களும் உள்ளன. இந்த கேமரா பொருத்தப்பட்ட ரேடார் வாகனங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை சந்திப்புகளில் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வீதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் கண்டு இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story