தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
NAMAKKAL KING 24X7 B |13 Oct 2025 9:07 PM ISTநாமக்கல் மாவட்டத்தில் மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் , வி.பி.ஆர்.இளம்பரிதி , எம்.நடேசன் ஆகியோர் தலைமையில் அனைத்து துறை பொது தகவல் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் , வி.பி.ஆர்.இளம்பரிதி எம்.நடேசன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து துறை பொது தகவல் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் , வி.பி.ஆர்.இளம்பரிதி , எம்.நடேசன் ஆகியோரால் பொதுத் தகவல் அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு மற்றும் கேள்விகளுக்கு விளக்கங்களும் மற்றும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களின் மீது உரிய காலத்தில் முழுமையான தகவல்கள் வழங்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டுமென அனைத்து பொதுத் தகவல் அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் M.நடேசன் M.Sc., L.L.B., நாமக்கல் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது 30 மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக 19 மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொது தகவல் அலுவலர்கள் ஆகியோர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர்கள் 6(1)-ன்படி கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது அல்ல என்றால் 5 வேலை நாட்களில் 6(3)-ன்படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பி, மனுதாரர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசு துறைகள் தங்கள் அலுவலகம் சார்ந்த தகவல் என்றால் 30 நாட்களுக்குள் தகவல்கள் வழங்க வேண்டும். தகவல்கள் வழங்கும் அலுவலர் அவரது பெயர் மற்றும் கையொப்பம், பொது தகவல் அலுவலரின் சீல் கட்டாயம் இட வேண்டும். மனுதாரர்களின் 6(3)-இன்கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தகவல்கள் வழங்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச்சட்ட பிரிவு 5(3)-ன்படி பொது தகவல் அலுவலரிடம் தனக்கு வேண்டிய தகவல் தொடர்பாக விவரங்களை மனுதாரர் கோரி வரும்போது அவருக்கு தேவையான நியாயமான உதவிகளை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தவறான தகவல்கள் திசை திருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. மேலும், ஆணையத்திலிருந்து வருகின்ற விசாரணை (சம்மன்) கிடைக்கப் பெற்றால் கட்டாயம் அரசு அலுவலர்கள் விசாரணைக்கு வருகை தர வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் M.நடேசன் M.Sc., L.L.B., தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா உட்பட அனைத்து துறை பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story


