முதலமைச்சர் கோப்பை -2025 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை -2025 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற
2652 நபர்களுக்கு ரூ.53.04 இலட்சம் மதிப்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் முதலமைச்சர் கோப்பை- 2025 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2652 நபர்களுக்கு ரூ.53.04 இலட்சம் மதிப்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் "முதலமைச்சர் கோப்பை" விளையாட்டுப் போட்டிகள்-2025ல் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 25 விளையாட்டுக்கள், மண்டல அளவில் 7 விளையாட்டுக்கள் மாநில அளவில் 37 வகையான போட்டிகளும் நடபெற்றது. எந்த பாகுபாடும், வேற்றுமையும் இன்றி இருக்கும் ஒரே இடம் விளையாட்டு மட்டும் தான். அனைவரும் ஒற்றுமையாகவும், ஆரோக்கியமாகவும் பழகக்கூடிய இடம் என்றால் அது விளையாட்டு மைதானம் தான். விளையாட்டு மைதானம் என்பது பல்வேறு நற்பண்புகளை கற்றுத் தரக்கூடிய இடமாகும் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு சாதனைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிலேயே தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் உற்று நோக்கக்கூடிய அளவில் வளர்ந்துள்ளது. விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். சர்வதேச விளையாட்டு போட்டிகள் நமது மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட், ஃபார்முலா கார் பந்தயம், ஹாக்கி, டென்னிஸ் இதுபோன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் சென்னை மாநகரத்திற்கு கொண்டு, நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. இதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் தான். பல்வேறு சிறப்புகள் விளையாட்டுத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் 3% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வழங்கப்படும் சான்றுகளும் அரசு பணிக்கு தகுதியுடையாக அமைந்துள்ளது. விளையாட்டு மேம்பாட்டுத் துறையானது மாணவர்களையும் இளைஞர்களையும் விளையாட்டுகளில் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமங்களில் உள்ள ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் நகரங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை போலவே சிறந்து விளங்க சம வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் கலைஞர் விளையாட்டுப் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. சென்னை, நீலகிரி, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் டேபிள் டென்னிஸ், ஸ்குமாஷ் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வரும் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அந்த வகையில் செப்டம்பர் 2024-ல் பாரா-பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை துளசிமதி அவர்கள் இங்கே வந்துள்ளார். எனவே விளையாட்டு போட்டியில் விளையாடுவதை, பொழுதுபோக்காக எடுத்து கொள்ளாமல் இதனை ஊக்கமாக எடுத்து கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையில் எதாவது ஒரு விளையாட்டினை தேர்ந்தெடுத்து, அதில் முழுகவனத்துடன் ஈடுபட்டு சிறப்பான முறையில் பயின்று அடுத்த ஆண்டு நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் கூடுதலான பரிசுகளை பெற வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பாரா-பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் மற்றும் அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை துளசிமதி அவர்கள் இந்த ஆண்டு இங்கே வந்துள்ளார் என்பது மிகவும் சிறப்பானதாகும். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பயின்று வருகின்றார். விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்து வருகிறார். விளையாட்டுத்துறையானது பல்வேறு பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளது. இதில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியும் ஒன்றாகும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இன்றைய தினம் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த மாவட்ட ஆட்சித்தலைவர், விளையாட்டுத் துறைச் சேர்ந்த அலுவலர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 80 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் பயிலுவதற்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே படிப்பும், விளையாட்டு நமது இரு கண்களாக இருக்க வைத்து, உங்களது வாழ்க்கையினை இலட்சியத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்றிக்கும் விளையாட்டுத் துறையே ஏணிப்படிக்கட்டுகளாகும். அந்த வகையில் விளையாட்டு போட்டியில் தோல்வி ஏற்பட்டாலும், அதுவே மிகப்பெரிய தன்னம்பிக்கையாக மாறும். தோல்வி அடைந்தவர் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிப்பது விளையாட்டு போட்டியில் மட்டும் தான். ஆகவே உயர்ந்த பண்புகளை பெற்று இந்த பாரத தேசத்தில் இளைய பாரதமாக நீங்கள் திகழ வேண்டும் வாழ்த்துகிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் 900 பள்ளி மாணவ, மாணவியர்கள், 900 கல்லூரி மாணவ, மாணவியர்கள், 210 அரசு அலுவலர்கள், 432 பொதுமக்கள், 210 மாற்றுத்திறனாளிகள் என 2652 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் (ஆண்கள் மற்றும் பெண்கள் தலா 442 தங்கப் பதக்கம், தலா 442 தலா 442 வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களையும்) இதில் தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3,000/-வீதம் ரூ.26,52,000/- மதிப்பிலும், வெள்ளி பதக்கம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் ரூ.17,68,000/- மதிப்பிலும், வெண்கல பதக்கம் பெற்றவர்களுக்கு தலா ரூ.1,000/- வீதம் ரூ.8,84,000/- என மொத்தம் ரூ.53,04,000/- மதிப்பில் பரிசு தொகைகளையும் வழங்கினார். இவ்விழாவில், செப்டம்பர் 2024 பாரிஸ் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற செல்வி துளசிமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்காக மாற்றுத்திறனாளிகளின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் எஸ்.கோகிலா, மண்டல முதுநிலை மேலாளர் சுகுணா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி உட்பட துறைசாந்த அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
Next Story