நாகை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 2450 மதுபான பாட்டில்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு
நாகை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வக்குமார் உத்தரவின்பேரில், சட்ட விரோதமான மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தாலுகா காவல் நிலையங்களில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சங்கமங்கலம், ஆழியூர் சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக கடத்தி. வரப்பட்ட 1500 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களையும், 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து, கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாகூர் வெட்டாற்றுப் பாலத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 950 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், நாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட மதுபான வேட்டையில், மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 2450 மதுபான பாட்டில்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபான வேட்டையில் ஈடுபட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பாராட்டினார்.
Next Story