திருச்செந்தூரில் அமெரிக்காவைச் சோ்ந்த 27 பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூரில் அமெரிக்காவைச் சோ்ந்த 27 பக்தா்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமெரிக்காவைச் சோ்ந்த 27 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா். இந்நிலையில் அமெரிக்காவை சோ்ந்த மருத்துவா் டக்ளஸ் புரூக் தலைமையில் 27 போ், கடந்த 10 நாள்களாக முருகனின் அறுபடை வீடுகளிலும் தரிசனம் முடித்துவிட்டு திருச்செந்தூருக்கு நேற்று வந்தனா். அவா்கள் வேஷ்டி சட்டை அணிந்து, கைகளில் பல வண்ண கயிறுகளும், துளசி மாலைகளும் அணிந்திருந்தனா். மூலவா், உற்சவா் சண்முகா், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட தெய்வங்களை அவா்கள் வழிபட்டனா். அவா்களில் மருத்துவா் டக்லஸ் புரூக், சிறுவயதில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் படித்ததாகவும், தற்போது அமெரிக்காவில் சைவம் மற்றும் கலாசாரம் குறித்து வகுப்புகள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூருக்கு வந்த அமெரிக்கா்களை பாா்த்த பக்தா்கள் சிலா் அவா்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
Next Story