பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

பல்வேறு திட்டங்களின் கீழ்  பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பீட்டில்  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.
X
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, “அன்புக்கரங்கள்” உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தினை தொடங்கி வைத்து, பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக்கல்வித் துறை, முன்னாள் படைவீரர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மிகவும், வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பு குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றலின்றி கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (15.09.2025) தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் அன்புக் கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். இச்சீரிய திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் “அன்புக்கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 140 குழந்தைகளுக்கு ரூ.2.80 இலட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். அனைவருக்கும் அனைத்து, எல்லாருக்கும் எல்லாம் என்ற சிந்தனைக்கு ஏற்ப நமது திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற வகையில், புதிய புதிய முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, மகளிர், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், கால்நடை வளர்ப்போர், ஆதரவற்ற குழந்தைகள் என அனைவரின் தேவைகளையும் கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக்கல்வித் துறை, முன்னாள் படைவீரர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களுக்கு தேவையான சுகாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்வியை எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ தெரிவித்தார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை ரூ.2000 வழங்கும் அன்புக் கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மாற்றுத்திறன் தன்மை கொண்ட பெற்றோர் உடையவர், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருப்பவரின் குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழும் பெற்றோரின் குழந்தைகள் என ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் என்ற இந்த மகத்தான திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் இருக்கும் குழந்தைகள் பெற்றோரு சொந்தம். பெற்றோரை இழந்த குழந்தைகள் இறைவனுக்கு சொந்தம். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இறைவனாக நின்று மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தினை வழங்கியுள்ளார்கள். உங்களது வாழ்க்கைக்கு இத்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 உதவித்தொகை 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது என்ற நிலையை நாமக்கல் மாவட்டம் அடைய வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தினர் இப்பணிகளை தாயுள்ளத்தோடு இருந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் இன்றைய தினம் விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவர்களுக்கு தலா ரூ.75,000 காப்பீடு வைப்பு பத்திரம், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாண உதவி, முன்னாள் படைவீரர் நலன் சார்பில் பயணிகள் வாகனம், ஆடு, மாடு வளர்ப்பு, கோழி பண்ணை, மின் பொருடகள் விற்பனை கடை, சரக்கு போக்கு வரத்து வாகனம் உள்ளிட்ட தொழில்களுக்கு மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.96,000/- வீதம் ரூ.1.44 கோடி மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 140 குழந்தைகளுக்கு ரூ.2.80 இலட்சம் உதவித்தொகை, பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த 15 மாணவர்களுக்கு தலா ரூ.75,000 வீதம் ரூ.11.25 இலட்சம் மதிப்பில் காப்பீடு வைப்பு பத்திரம், முன்னாள் படைவீரர் நலன் சார்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.5.60 கோடி மொத்த மதிப்பீட்டில் ரூ.1.48 கோடி மதிப்பில் பல்வேறு தொழில்களுக்கு மானிய உதவி, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தெரு நாய்கள் கடித்து இறந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 15 நபர்களுக்கு ரூ.1.15 இலட்சம் இழப்பீடு தொகை என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.3.08 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மண்டல இணை இயக்குர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.வீ.பழனிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) செல்வி ஈ.சந்தியா, மாவட்ட திட்ட அலுவலர் எப்.போர்ஷியா ரூபி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் கலைச்செல்வி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) கோ.கற்பகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story