காப்பர் வயர் திருடிய 5 பேர் கைது

X

பெருமாநல்லூரில் காப்பர் ஒயர் திருடிய கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் கைது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு கார் பறிமுதல் .
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர், டாலர் கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராக குமரேசன் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கட்டிட வேலை முடிந்து இரவு 10 மணி அளவில் பொருட்களை ஒரு அறையில் வைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அடுத்த ஒரு வாரம் அந்தக் கட்டிடத்தில் வேலை இல்லாததால் ஒரு வாரம் கழித்து மீண்டும் வேலைகளை தொடங்க அந்த அறையை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 4,320 மீட்டர் அளவுள்ள 24 காயில் காப்பர் ஒயர்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பந்தமாக பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஆதியூர் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் வந்த ஐந்து பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், காரில் வந்தவர்கள் டாலர் கார்டன் பகுதியில் கட்டிட காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வரும் கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் பட்டுராஜா என்பதும் உடன் இருந்தவர்கள் அவரது நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், விக்னேஷ், அரவிந்த் மற்றும் சுப்பிரமணி என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் ஐந்து பேரும் இணைந்து காப்பர் ஒயர்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்களை அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story