விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்குரூ.5 ஆயிரம் தீபாவளி போனஸ்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை
100 நாள் வேலைக்கான ஜாப் கார்டு உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்க முடியாத நிலையில் சட்டப்படியான நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி பட்டா வழங்க வேண்டும். சென்ற சம்பா பருவத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சங்கர், பொருளாளர் பர்ணபாஸ், மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி, பாப்பு, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்பாட்டத்திற்கு, கீழையூர் கடைத் தெருவில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பேரணியாக சென்று கலந்து கொண்டனர்.
Next Story