சேலத்தில் அறக்கட்டளை நடத்தி ரூ.500 கோடி மோசடி .

சேலத்தில் அறக்கட்டளை நடத்தி ரூ.500 கோடி மோசடி .
X
வழக்கு தொடர்பாக கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை கோர்ட்டில் மனு
சேலத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி விஜயா பானு மற்றும் ஜெயபிரதா, சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், விஜயாபானுவின் டிரைவர் சையத் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.500 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த அறக்கட்டளையில் முதலீடு செய்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து அறக்கட்டளை மீது புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரை போலீஸ் காவில் எடுத்து விசாரிக்க சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் எவ்வளவு பணம் மோசடி நடந்தது?, எப்படி அறக்கட்டளை நடத்தினார்கள்?, யார் யாரிடம் பணம் வசூலித்து உள்ளார்கள்?, வசூலித்த பணம் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என தெரியவரும். எனவே, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். ஒரு வார காலத்திற்கு 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை 2 நாட்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Next Story