நெல் மூட்டைகளை விற்பனை செய்த 6307 விவசாயிகளுக்கு ரூ.87.74 கோடி

X
நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூண்டி மற்றும் சியாத்தமங்கையில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்திய பிரதா சாஹு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனருமான அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது நாகை மாவட்டத்தில் தற்போது உள்ள 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முழு திறனில் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 41,062 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 26,713 மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 6307 விவசாயிகளுக்கு 87 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே பருவத்தில் 23 நிலையங்கள் மூலமாக 5,440 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது இதை விட 13 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 9, 2023 அன்று ஒரே நாளில் 3,129 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. பெண்கள் மற்றும் வேலை செய்யும் அனைவருக்கும் வேலை செய்யும் இடத்தில் நிரந்தர டாய்லெட் வசதி, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாகை எம்பி வை.செல்வராஜ், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை.மாலி, மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

