பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு
Chennai King 24x7 |11 Jan 2025 2:33 PM GMT
வரும் 1-ம் தேதியிலிருந்து முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பான கேள்விகளுக்கு, ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை அரசு பரிசீலித்து வருகிறது என்ற பதிலே தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த சூழலில், ஆட்டோவுக்கான கட்டணத்தை ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததால், ஓட்டுநர்கள் சார்பில் பிப்.1-ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தின்படியே தற்போது கிளாம்பாக்கத்திலிருந்து ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த கட்டணத்தை உரிமைக்குரல் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story