100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

X

பேச்சுவார்த்தையில் விலக்கி கொள்ளப்பட்டது
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ள அனைவரும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2 வாரமாக அனைவருக்கும் வேலை தராமல், குழுக்களாக பிரித்து, 30 பேர் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென என உத்தரவு வந்துள்ளதாக பணித் தள பொறுப்பாளர்கள் கூறியதால், யாரும் பணிக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில், வாழக்கரை மெயின்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கிருஷ்ணன் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், 100 நாள் வேலை திட்ட அட்டை வைத்திருக்கும் நபர்கள் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, ஜி.சங்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பக்கிரிச்சாமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் கேசவன், வாழக்கரை ஊராட்சி வார்டு உறுப்பினர் மணிமேகலை சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story