சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.134 கோடி வங்கிக் கடன்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.134 கோடி வங்கிக் கடன்

வங்கி கடன் வழங்கல் 

தூத்துக்குடியில் 1112 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.134 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில்நடைபெற்ற அரசு விழாவில், 1112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.134 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும் மற்றும் 3 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றிச்சென்று சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ரூ.15 இலட்சம் மதிப்பிலான மதி எக்;ஸ்பிரஸ் மின் வாகனத்திற்கான சாவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சுயஉதவிக்குழு 1989ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் மகளிரை முழுமையாக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கி வைத்தார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பெண்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுழல்நிதி மானியம், சுயதொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்தி தந்ததே தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

பெண்களாலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த முடியும். அதனால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1.16 கோடி பெண்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாதம்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார்கள். அதன் மூலம் மாதம்தோறும்; ரூ.1000 பெண்களின் கைகளில் கிடைப்பது மிகப்பெரிய சேமிப்பு. அந்த தொகை மருத்துவ செலவு, குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவும். அதுபோல அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தினை விரைவில் விரிவுப்படுத்த உள்ளார்கள். புதுமைப்பெண் திட்டம் தொடங்கி முதல் ஆண்டில் 2.11 இலட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளார்கள். இதில் 11922 பேர் இடைநிற்றல் நின்றவர்கள் தற்போது கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த ஆண்டு 2.30 இலட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது ஊரகப் பகுதிகளில் வாழும் விளிப்பு நிலை குடும்பங்களைச் சார்ந்த மகளிரை கண்டறிந்து அவர்களின் வறுமை நிலையினை அகற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் முக்கியமானது மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து அக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ஏற்படுத்தி கொடுப்பதாகும். இதன் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதாகும். 2023-2024-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசு வங்கி கடன் இணைப்பு இலக்கீடாக மாநிலம் முழுவதற்கும் ரூ.30000 கோடிகள் நிர்ணயித்தது. அதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டிற்கு சுயஉதவிக்குழு கடன் இலக்கீடாக 15616 குழுக்களுக்கு ரூ.881.00 கோடிகள் (ஊரகம் - ரூ.634 கோடி, நகர்ப்புறம் 247 கோடி) அரசால் நிர்ணயிக்கப்பட்டு ஆணை பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாளது தேதிவரை தூத்துக்குடி மாவட்டமானது ரூ.900.73 கோடிகள் 15242 குழுக்களுக்கு வங்கியுடன் இணைப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதில் இன்றைய தினம் நடைபெறும் விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் இலக்கீடாக ரூ.134 கோடிகள் நிர்ணயிக்கப்பட்டு மொத்த இலக்கீடும் எய்தப்பட்டு, 1112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் பொருட்களை தயாரித்து அதனை மதிப்புப் கூட்டுப் பொருட்களாக மாற்றி அதனை சந்தைப்படுத்தி அதிக இலாபங்களை ஈட்டி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு உங்களுடைய சுயதொழில் மேன்மை அடையும்பட்சத்தில் தங்களது சுய தொழிலை மேலும் விரிவுப்படுத்துவதற்கு வங்கிகளை எளிதாக நாடி பெரிய அளவிலான கடன் தொகை நீங்கள் வாங்க முடியும். ஆகையால் நமக்கென்று கடன் தர பல வங்கிகள் தயாராக இருக்கின்றார்கள். ஆகையால் மகளிர்கள் நினைத்தால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். ஆகையால் அனைவரும் ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) வீரபத்திரன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா பிச்சையா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ்,உதவி திட்ட அலுவலர்கள் முருகன், வெள்ளப்பாண்டி, கனகராஜ், கிருஷ்ணகுமார், பிரசாந்த், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story