காஞ்சிபுரத்தில் அரசு வீடு கட்டுவதற்கு ஆணைக்காக 17,653 பேர் காத்திருப்பு
கோப்பு படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணக்கெடுப்பு முடிந்தும், ஒதுக்கீடு ஆணை கிடைக்காததால், அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 17,000 பேர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு,2024 ம் ஆண்டிலாவது வீடு கட்டுவதற்கு ஆணை கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன. இதில், 2011ல், சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குடிசை வீட்டில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு, புதிய வீடு கட்டுவதற்கு அரசு முடிவு செய்து, பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டன.
இதையடுத்து, 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில், 2018ம் ஆண்டு வீடு தேவைப்படுவோருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். புலம்பல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, 2021ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையினர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தினர்.
அதேபோல, 2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புதிய குடிசை வீடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,000 வீடுகள் தேவைப்படும் என, புள்ளி விபரம் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இதுதவிர, 2,966 வீடுகள் பயனாளிகள் பட்டியலில் தேர்வு செய்ய முடியாத நிலைக்கு ஊரக வளர்ச்சி துறையினர் தள்ளப்பட்டு உள்ளனர். ஊராட்சிகளில் வீடு தேவைப்படுவோரின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், ஊராட்சிகளில் வீடு கட்டுவதற்கு ஆர்வம் இருக்கும் பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை கிடைக்கவில்லை என, பயனாளிகள் புலம்பி வருகின்றனர்.