3.2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணி

3.2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணி
X
திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில், 1.5 கி.மீ., துாரத்திற்கு, 3.2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவுபடுத்தப்படுகிறது.
திருக்கழுக்குன்றத்திலிருந்து, மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு பகுதி வரை, 14 கி.மீ., சாலை உள்ளது. செங்கல்பட்டு - மாமல்லபுரம் தட வாகனங்கள், இவ்வழியாக கடக்கின்றன. இச்சாலை நீண்ட காலத்திற்கு முன், 21 அடி அகல சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது சுற்றுலா வாகனங்கள் பெருகி, போக்குவரத்து அதிகரித்ததால், சாலையை விரிவாக்கும் அவசியம் ஏற்பட்டது. இந்நிலையில், கருங்குழி - திருப்போரூர் இடையே, கடந்த 2019ல், 21 அடி அகல பழைய சாலை, 33 அடி புதிய சாலையாக விரிவாக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில், அத்தடம் குறுக்கிடும் திருக்கழுக்குன்றம் - எச்சூர் பகுதியில், புதிய விரிவாக்க சாலை அமைந்தது.எச்சூர் - மாமல்லபுரம் இடையே மட்டும், பழைய குறுகிய அகல சாலையே நீடிக்கிறது. இச்சாலையையும் படிப்படியாக அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. இத்தடத்தில், மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், எண்ணுார் - மாமல்லபுரம் இடையே அமைக்கப்படும் புதிய சாலை இணைக்கப்பட உள்ளது. எனவே, வடகடம்பாடி பகுதியிலிருந்து விரிவாக்க திட்டமிட்டு, தற்போது குழிப்பாந்தண்டலம் வரை, 1.5 கி.மீ., துாரத்திற்கு, 33 அடி அகல சாலையாக, 3.2 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்படுகிறது. இங்குள்ள மூன்று பழைய குறுகிய பாலங்களை அகற்றி, அகலமான பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
Next Story