45 இடங்களில் ஸ்ரீ சந்து மாரியம்மன் கும்பிடு விழா

X

சின்னாளபட்டியில் 45 இடங்களில் ஸ்ரீ சந்து மாரியம்மன் கும்பிடு விழா பிருந்தாவனத்தோப்பு, தேவி கருமாரியம்மன் கோவில், சிவசுப்ரமணியர் கோவிலில் அம்மன் கரகம் அலங்கரிக்க குவிந்த பக்தர்கள் • மேளதாளம், முளைப்பாரி ஊர்வலத்துடன் சந்துமாரியம்மனை தங்கள் பகுதிக்கு அழைத்து வந்த பக்தர்கள்
சின்னாளபட்டியில் நேற்று 45 இடங்களில் ஸ்ரீசந்து மாரியம்மன் கும்பிடு விழா நடைபெற்றது. அம்மன் கரகத்தை அலங்கரிக்க பிருந்தாவனத்தோப்பு, தேவி கருமாரியம்மன் கோவில், சிவசுப்ரமணியர் கோவிலில் முளைப்பாரியுடன் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த 80 வருடங்களுக்கு முன்பு காலரா நோய் பரவி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மாரியம்மனை நினைத்து தை மாதம் முதல் தாங்கள் வருடந்தோறும் சந்து மாரியம்மனாக ஒவ்வொரு பகுதியிலும் கும்பிடுகிறோம். நீங்கள் எங்களை நோய்நொடியிலிருந்து காக்கவேண்டுமென கையெடுத்துக் கும்பிட்டு வழிபாடு செய்ததால் அன்று முதல் இன்று வரை 80 வருடங்களாக ஸ்ரீசந்து மாரியம்மன் கும்பிடு விழாவை சின்னாளபட்டியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று 45க்கும் மேற்பட்ட தெருக்களில் ஸ்ரீசந்து மாரியம்மன் கும்பிடு விழா நடைபெற்றது. அதிகாலை 7 மணி முதல் அம்மன் கரகம் எடுப்பதற்காக பக்தர்கள் சின்னாளபட்டி பிரிவில் உள்ள பிருந்தாவனத்தோப்பு, கரியன்குளக்கரையில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கடைவீதியில் உள்ள ஸ்ரீசிவசுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பின்னர் 10 மணியளவில் அம்மன் கரகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தனித்தனியாக முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் அம்மனை தங்கள் பகுதிக்கு அழைத்து வந்தனர். குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள் குழந்தை பிறந்த உடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தவாறு கோவிலுக்கு வந்தனர். நேற்று ஒரே நாளில் வள்ளுவர் காலனி, காமராஜர் சாலை, அண்ணா நகர், திருவி.க. நகர் உட்பட 45 தெருக்களில் சந்துமாரியம்மன் சாமி கும்பிடுவிழா நடைபெற்றதால் சின்னாளபட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. சந்து மாரியம்மன் கோவில் விழா நடைபெறும் அனைத்து தெருக்களிலும் மதியம் 12மணியளவில் பொதுப்பொங்கல் வைக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் ஒவ்வொரு தெருக்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலை 7 மணிக்கு மேல் அம்மன் கரகத்தை முளைப்பாரி ஊர்வலத்துடன் அழைத்து சென்று குளம் மற்றும் கிணறுகளில் கரைத்தனர்.
Next Story