48-வது சென்னை புத்தக காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது: உதயநிதி வழங்கினார்
Chennai King 24x7 |11 Jan 2025 2:25 PM GMT
பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை 6 பேருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த டிச.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே பபாசி சார்பில் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு பொற்கிழி விருதுகள் வழங்கும் விழா புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவர், பேரா.அருணன் (உரைநடை), எழுத்தாளர்கள் சுரேஷ்குமார் இந்திரஜித் (நாவல்), என்.ராம் (சிறுகதை), கவிஞர் நெல்லை ஜெயந்தா (கவிதை), கலை ராணி (நாடகம்), நிர்மால்யா (மொழிபெயர்ப்பு) என 6 பேருக்கும் 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சம் வழங்கினார். இதுதவிர பபாசி சார்பில் பதிப்பகச் செம்மல் விருது, சிறந்த நூலகர் விருது, சிறந்த சிறுவர் அறிவியல் நூல் உட்பட சிறப்பு விருதுகளை 9 பேருக்கு அவர் வழங்கி கவுரவித்தார். நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி தலைவர் கவிதா சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தாண்டு புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு பெறவுள்ளது.
Next Story