640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி அருகே லோடு ஆட்டோவில் கடத்திச் சென்ற 640 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனா்.
குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் அனுராதா, உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம், தலைமை காவலா்கள் கந்த சுப்பிரமணியன் பூலையா நாகராஜன் ஆகியோா் கொடுக்காம்பாறை பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 16 மூட்டைகளில் மொத்தம் 640 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியைக் கடத்தி வந்ததாக, லோடு ஆட்டோ ஓட்டுநா் தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சோ்ந்த ஜான்செல்வத்தை (32) கைது செய்து, லோடு ஆட்டோ மற்றும் 640 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும், கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த காா்த்திக், கருங்காலிப்பட்டியைச் சோ்ந்த தா்மேந்திரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.