கழிவுநீர் அகற்றும் வாகனம் மீது ஆலமரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கழிவுநீர் அகற்றும் வாகனம் மீது ஆலமரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு

மரம் விழுந்த வாகனம்

ஓசூர் அருகே செப்டிக் கழிவு அகற்றும் வாகனம் மீது ஆலமரம் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (49) இவர் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான செப்டிக் கழிவு அகற்றும் வாகனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்த வாகனத்தில் பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (38) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மாரப்பனும் வெங்கடேசனும் ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்திற்கு கழிவுகளை அகற்றும் பணிக்காக செப்டிக் கழிவு அகற்றும் வாகனத்தை எடுத்து சென்றனர். அங்கு பணிகளை முடித்த பின்னர் இருவரும் அந்த வாகனத்தில் ஓசூர் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது குசினிபாளையம் என்ற இடத்தில் செப்டிக் கழிவு அகற்றும் வாகனம் சென்றபோது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே நின்றிருந்த நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வாகனத்தின் மீது விழுந்துள்ளது.

அதே நேரத்தில் மரத்தின் கிளைகள் விழுந்ததில் அந்த பகுதியில் சென்ற மின்சார கம்பிகளும் அறுந்து வாகனத்தின் மீது விழுந்தது. ஆலமரத்தின் பெரிய கிளை விழுந்ததில் வாகனத்தின் கேபின் பகுதியில் இருந்த ஓட்டுநர் மாரப்பா மற்றும் கிளீனர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் மீது மின்சாரமும் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் உடனடியாக மத்திகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஓசூர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் ஆலமரத்தின் கிளைகளை இயந்திரத்தின் மூலம் அகற்றினர். அதேபோல அந்த பகுதியில் கீழே விழுந்து கிடந்த மின்சார கம்பிகளை அகற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்குப்பின் கிரேன் மூலம் செப்டிக் டேங்க் வாகனத்தின் உள்ளே சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்த 2 பேரின் உடல்களும் நீக்கப்பட்டது. இதனையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த இருவரது உறவினர்களும் அப்பகுதிக்கு வந்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். இது குறித்து மத்தியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திகிரியில் இருந்து இடையநல்லூர் செல்லும் சாலையில் இதே போல ஏராளமான பழமையான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Tags

Next Story