மணக்காட்டில் தாமதமாகும் வகுப்பறை கட்டடப் பணிகள்
கிடப்பில் போடப்பட்ட பணிகள்
பேராவூரணி அருகே, மணக்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் இருந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இது குறித்து தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது.
மேலும், இது குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கவனத்திற்கும், கிராம மக்கள் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மணக்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரு வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவும் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், கல்வித்துறை, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் அலட்சியம், ஒப்பந்ததாரரின் மெத்தனத்தாலும், 6 மாதங்களை கடந்த நிலையில் இதுவரை வகுப்பறை கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. தரைத்தளம் அமைக்கப்பட்டதோடு சரி, எந்த வேலையும் நடைபெறாமல், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், சட்டப்பேரவை உறுப்பினர் பரிந்துரையின் பேரில், அதே வளாகத்தில் 6 வகுப்பறை கொண்ட கட்டிடம் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இது எந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு ? என்ற அறிவிப்பு தட்டியும் வைக்கப்படவில்லை. இந்த பணியும் அரையும், குறையுமாகவே நிற்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் இதனை கண்டு கொள்ளவில்லை.
எனவே, "மாவட்ட ஆட்சித்தலைவர் இதனை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். மழைக் காலம் தொடங்க உள்ளதால், பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை விரைந்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் போராட்டங்களை அறிவிக்க நேரிடும்" என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான வீரக்குடி ராசா தெரிவித்துள்ளார்.