காமாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
கருவாழக்கரை காமாட்சியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. ஆயிரக்கண்ககான குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கும் ஶ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 12ஆம்தேதி விஷேச அபிஷேக ஆராதனையுடன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினந்தோறும் மகாஅபிஷேகம் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்த நிலையில் இன்று தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. காவிரிகரையில் இருந்து சக்திகரகம் புறப்பட்டது. மேளதாள வாத்தியங்கள் முழங்க விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் சக்திகரகத்துடன் வீதியுலாவாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். பின்னர் ஶ்ரீகாமாட்சியம்மனுக்கு மகாதீபாரதனை செய்யப்பட்டு இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.