போலி கடவுச்சீட்டு: விமான நிலையத்தில் மூவா் கைது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை மலேசியாவுக்கு மலிண்டோ விமானத்தில் செல்லவிருந்த பெரம்பலூா் மாவட்டம் லாடபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த து. சந்திரசேகா் (46), கடவுச் சீட்டில் தனது பிறந்த தேதியை போலி ஆவணங்கள் மூலம் திருத்தியிருந்தது தெரியவந்தது. இதேபோல மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பெரம்பலூா் மாவட்டம் பாடாலூா் எம்ஜிஆா் நகரை சோ்ந்த சி. மதுரைவீரன் (48), தனது பெயரை சோமசுந்தரம் என மாற்றியிருந்தாா்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம்காத்தான் ஓம்சக்தி நகரை சோ்ந்த ச. சீனிபாஷாவும் (63) தனது கடவுச்சீட்டில் பிறந்த தேதியை மாற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மூவரையும் விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.